விலங்கெனத் திரிந்த மனிதன் நாகரிகமும் வளர்ச்சியும் பெற்று மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிய காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு புரட்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியன அவனுக்கு அந்தந்த காலத்திற்குரிய வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்த்தது. மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சி என்பது மக்கட்தொகை பெருக்கத்திற்கு வழிவகுக்கும். "ஒரு நாட்டின் நாகரிக வரலாற்றை அங்குள்ள மண்ணின் வரலாறு கூறும் என்றும், மனிதனின் கற்றலறிவு மண்ணிலிருந்து தொடங்குகிறது என்றும்" அறிஞர் வில்காக்ஸ் முன்வைக்கும் கூற்றுக்கேற்றவாறு மண் வளம் நிறைந்த பகுதியில் வேளாண் உற்பத்தி அமோகமாக வளர்ந்தது. மக்கள் அந்தப் பகுதியில�... See more
விலங்கெனத் திரிந்த மனிதன் நாகரிகமும் வளர்ச்சியும் பெற்று மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிய காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு புரட்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியன அவனுக்கு அந்தந்த காலத்திற்குரிய வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்த்தது. மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சி என்பது மக்கட்தொகை பெருக்கத்திற்கு வழிவகுக்கும். "ஒரு நாட்டின் நாகரிக வரலாற்றை அங்குள்ள மண்ணின் வரலாறு கூறும் என்றும், மனிதனின் கற்றலறிவு மண்ணிலிருந்து தொடங்குகிறது என்றும்" அறிஞர் வில்காக்ஸ் முன்வைக்கும் கூற்றுக்கேற்றவாறு மண் வளம் நிறைந்த பகுதியில் வேளாண் உற்பத்தி அமோகமாக வளர்ந்தது. மக்கள் அந்தப் பகுதியில் குழுமி வாழ ஆரம்பித்தனர். வளமான மண் விரிந்த பூமி, மக்களின் வாழிடத்தை பரவலாக்கிக்கொண்டே சென்றது. மேலும் திரைகடல் ஓடியும் மக்கள் திரவியம் தேடத் தொடங்கினர். இது மக்கள் வாழிட மற்றும் தொழிலிட பெயர்ச்சியை அதிகரித்தது. இவ்வாறு மக்கள் தொகை பெருக்கம், இடப்பரவல், இடபெயர்ச்சிக்கு எண்ணற்ற காரணிகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் கற்கும் இயல்தான் மக்கட்தொகை புவியியல் என்று சொன்னால் அது மிகையன்று. சுருங்கக்கூறின் புவிப்பரப்பில் பரவியுள்ள மக்களின் இடப்பரவல் வேறுபாட்டிற்குரிய காரணிகள், விளைவுகள் ஆகியவற்றை விளக்கும் இயலே மக்கட்தொகை புவியியல் ஆகும். மக்கட்தொகை புவியியலை இவ்வாறு செம்மையாக விளக்கும் இந்நூல், உள்ளபடியாக போட்டித் தேர்வர்கள் மற்றும் புவியியல் மாணாக்கர்களுக்கு ஓர் கலங்கரை விளக்கம் என்று சொன்னால் அது மிகையன்று.